KJ யேசுதாஸ் பாடிய இந்த சூப்பர் ஹிட் பாடலை முதலில் பாடியது இவரா??

எவ்வாறு எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் TM சௌந்திரராஜன் அவர்களின் குரல் கன கச்சிதமாக பொருந்தியதோ அப்படியே SP பாலசுப்ரமணியத்தின் குரலும் ரஜினி மற்றும் கமலுக்கு ஸ்பஸ்ட சுத்தமாக ஒன்றிப்போகும். இந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களின் பெரும்பாலான பாடல்களை SP பாலசுப்ரமணியம் தான் பாடியிருப்பார். அதிலும் கமலுக்காக பாடும்போது உலக நாயகனுக்குரிய பாணியிலும், ரஜினிக்காக பாடும் போது சூப்பர் ஸ்டாருக்கே உரிய ஸ்டைலை கலந்தும் பாடுவது SP பாலசுப்ரமணியத்தின் தனிச்சிறப்பு.

அதிலும், 40 வருடங்கள் கடந்து இன்றும் ரஜினியின் ஓப்பனிங் பாடல்களை SP பாலசுப்ரமணியம்தான் பாடி வருகிறார். ரஜினியின் சமீபத்திய படமான தர்பாரிலும் ஓப்பனிங் பாடலை SP பாலசுப்ரமணியமே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதே SP பாலசுப்ரமணியம் ரஜினிக்காக பாடிய ஒரு பாடலில் அவருடைய குரலை நீக்கிவிட்டு வேரொருவரை வைத்து பாடி பதிவு செய்தார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம், நீங்கள் நம்பியே ஆக வேண்டும். ஏனென்றால் இந்த தகவலை சொன்னதே திரு SP பாலசுப்ரமணியம் அவர்கள்தான்.


சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் பேனரில், இயக்குனர் P வாசுவின் இயக்கத்தில் 1992ஆம் வருடம் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் மன்னன். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, குஷ்பு உள்பட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இசை இசைஞானி இளையராஜா. படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்னும் தாயன்பைக்குறித்த பாடலை பக்திமணம் கமழ நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருப்பார்கள். இன்றும் இதனை வெறும் சினிமா பாடலாக மட்டுமல்லாமல் பக்திப் பாடலாகவும் மக்கள் பார்க்கின்றனர்.


கந்தர்வக் குரலோன் KJ யேசுதாஸின் குரலில் கல்லையும் கரையச் செய்துவிடும் இந்தப் பாட்டு. அப்படி ஒரு ஆத்மார்த்த அர்பணிப்போடு இந்த பாடலை பாடியிருப்பார் யேசுதாஸ். 'யேசுதாஸ் அவர்களைத் தவிர வேறு யாருக்கு இந்தப் பாடல் பொருந்த முடியும்!!, அவருடைய தெய்வீகக் குரலுக்கென்றே உருவான பாடல் இது' என்று பலர் இந்த பாட்டையும், KJ யேசுதாஸ் அவர்களையும் பாராட்ட கேட்டிருப்போம்.


ஆனால் உண்மையில் இந்தப்பாடலை முதலில் SP பாலசுப்ரமணியம் தான் பாடியிருந்தார். இதை SPB அவர்களே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பாடல் பதிவில் தனக்கு திருப்தி ஏற்படாத காரணத்தால், தன்னுடைய குரலை விட இந்தப் பாடலுக்கு KJ யேசுதாஸ் அவர்களின் குரலே மிக பொருத்தமாக இருக்கும் என சொல்லி சென்றுவிட்டாராம், அதன்பிறகே KJ யேசுதாஸை அழைத்து பாட வைத்து பதிவு செய்தார்களாம்.

SP பாலசுப்ரமணியம் அவர்களின் கணிப்பு மிகச் சரியே என்று ஆமோதிக்கத் தோன்றினாலும் SPB அவர்களின் பணிவும், வெளிப்படைத்தன்மையும் அவர் மீதான நம் அபிமானத்தை சற்று உயர்த்தவே செய்கிறது இந்த நிகழ்வு.



Comments