நிமிடங்களில் உருவான சூப்பர் ஹிட் பாடல்கள் – அசத்திய இளையராஜா - அதிருப்தியான இயக்குனர்
80களின் மத்தியில்
ஆரம்பித்த கங்கை அமரன்-இளையராஜா-ராமராஜன் கூட்டணி 90கள் வரை ஒரு மாபெரும் வெற்றிக்
கூட்டணியாக வலம் வந்தது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படங்கள் அனைத்துமே தரமான மசாலா
படங்களாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவையாகும்.
ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, இப்படி பலர் இப்படத்தில் நடித்திருப்பார்கள்.1989ஆம் வருடம் வெளிவந்து தமிழ் நாட்டின் பல தியேட்டர்களில் 1 வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனை நிகழ்த்திய படம் கரகாட்டக்காரன்.கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டதால் இப்படத்தின் இசைக்கு இசைஞானி கூடுதல் கவனம் செலுத்தியிருப்பார். இந்த படத்தின் ஒவ்வொரு பாட்டும் அந்தந்த சூழ்நிலையைத்தான் பிரதிபலிக்குமே தவிர ஒரு பாட்டு அதன் முந்தைய பாட்டின் சாயலில் இருக்காது. உதாரணத்திற்கு ‘முந்தி முந்தி விநாயகரே’ கரக கலைஞர்களின் கடவுள் வாழ்த்து பாடலாக அமைந்திருக்கும், அதே சமயம் ‘மாங்குயிலே பூங்குயிலே’ ஒரு கரக கலைஞனின் வாழ்க்கையில் பூத்திருக்கும் காதலை அவன் சார்ந்த கலையின் வடிவிலேயே வெளிப்படுத்தும். ‘குடகு மலைக் காற்றில் வரும் பாட்டோ’ கரகக்கலையே கலக்காத வண்ணம் காதலர்களின் பிரிவு சோகத்தை மட்டுமே நமக்கு கிடத்தும். இப்படத்தின் டைட்டில் கார்ட் பிண்ணனியோ இளையராஜாவே இயற்றி பாடின ‘பாட்டாலே புத்தி சொன்னார்’ பாடலைக் கொண்டிருக்கும். இந்தப் பாடல் கேட்பதற்கும் சுவையாக இருக்கும், வரிகளோ ஒவ்வொரு பாட்டிற்கும் இசைஞானி எடுத்துக் கொள்ளும் சிரமத்தை நமக்கு எடுத்துரைக்கும். இவ்வாறு இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் அமையப் பெற்றிருக்கும்.
ஆனால் இப்படத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் அனைத்தையும் உருவாக்க இளையராஜா எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நிமிடங்களே. அதிலும் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் சில நிமிஷத்துளிகளிலேயே உருவானதாம். அருகில் நின்று கொண்டிருந்த கங்கை அமரன் இளையராஜாவைப் பார்த்து, ‘சொந்த தம்பிக்கு போட்டுக் குடுக்கற, இன்னும் கொஞ்சம் நல்ல ட்யூன்கள் கொடுக்கக் கூடாதா?’ என்று கேட்டாராம். அதற்கு இளையராஜா, ‘மக்களுக்கு புடிக்கிற விதத்துலதான் பாடல்கள குடுத்திருக்கேன், சந்தேகப்படாத!’ என்று நம்பிக்கை கொடுத்து கங்கை அமரனை அனுப்பினாராம். இசைஞானியின் வாக்குப்படியே இன்றும் இப்பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. முக்கியமாக, இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்காத திருவிழாக்களே தமிழ் நாட்டில் இன்று வரை கிடையாது. அந்த அளவிற்கு நம் வாழ்வியலோடு கலந்து நிற்பவை கரகாட்டக்காரன் திரைப்படப் பாடல்கள்.





Comments
Post a Comment