பாடகர் யேசுதாஸையே ஓரங்கட்டினவரா கமல்? எப்படி.. எப்போது..?

உலக நாயகன் கமல்ஹாசன் எப்பேர்ப்பட்ட சிறந்த நடிகர் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே. நடிகர், இயக்குனர், கதாசிரியர், நடனக்கலைஞர், வசனகர்த்தா, பாடலாசிரியர், கவிஞர், பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர் இவர். திரைத்துறையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக டெக்னிக்கல் சார்ந்த விஷயங்களை நன்கு அறிந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே. பல புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை கமலையே சாரும். நடிப்பைப் பொருத்த வரை இவர் தொடாதே உச்சமே இல்லை. கிட்டதட்ட எல்லா விதமான காதாபாத்திரங்களையும் நடித்து விட்டார். நடிப்புத்துறையில் இவர் ஒரு நடமாடும் பல்கழைக்கழகம் என்பது தேசமே அறிந்த உண்மை.


இப்படி பன்முக திறன் கொண்ட கமல் ஒரு நல்ல இசைக் கலைஞரும் கூட. நடனத்தை முறையாக பயின்றதைப் போன்று மிருதங்கம் வாசிக்கவும் கூட முறையாக பயின்றுள்ளார். இன்றும், இவருடைய அலுவலகத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மிருதங்கத்தை எடுத்து வைத்து வாசித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை ஒரு பேட்டியில் நடிகை கௌதமி கமலின் மிருதங்க ஞானத்தை பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் கமல் நல்ல பாடகரும் கூட. அந்தரங்கம் திரைப்படத்தில் வரும் ‘ஞாயிறு ஒளி மழையில்’ என்னும் பாடல் தொடங்கி பல பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார் கமல்ஹாசன். அவள் அப்படித்தான் திரைப்படத்தில் வரும் ‘பன்னீர் புஷ்பங்களே’ என்னும் பாடல் இவருடைய சாரீர வனப்பிற்கு பெரும் சான்று. ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ பாடலும் கூட இவருடைய பாடும் திறனுக்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டு. 1991ஆம் வருடம் வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றிருக்கும். S ஜானகியுடம் இணைந்து டூயட்டாக கமல் பாடியிருக்கும் இந்த பாடலை முதலில் பாட இருந்தவர் KJ யேசுதாஸ் அவர்கள்தான். 



பாடல் கம்போஸிங் முடிந்து எந்தெந்த பாடலுக்கு யார் யாரையெல்லாம் அழைத்து பாடச்செய்வது என்ற ஆலோசனையில், KJ யேசுதாஸ், மற்றும் S ஜானகி ஆகியோரைக் கொண்டு இந்தப் பாடலை பதிவு செய்துவிட முடிவானது. பிறகு இந்த பாட்டிற்கு ‘ட்ராக்’ பாடியிருந்த கமலினுடைய குரலே பாட்டிற்கு மிக பொருத்தமாக இருந்ததால் அவருடைய குரலிலேயே பாடல் வெளியானது.

Comments